
முன்னுரை
இந்த உலகத்தில் தோன்றும் ஒவ்வொரு உயிருள்ள உயிரற்ற அனைத்துமே இறைவனால் உண்டாக்கப்பட்டவை. இறைவனால் உண்டாக்கப்பட்ட அனைவருமே ஏதாவது வகையில் ஆசிரியர்கள் தான். நன்னூலில் உயிரற்ற பொருட்களாகிய நிலம், மலை, தராசு, மலர் ஆகியவற்றின் குண நலன்களை ஆசிரியரின் குணநலன்களோடு ஒப்பிடுகிறார் பவணந்தி முனிவர். “மலர்நிகர் மாட்சியும் உலகியல் அறிவோடு உயர் குணம் இணையவும் அமைப்பவன் நூல் உரை ஆசிரியர் அண்ணே” என்ற அடிகள் மூலம் இதனை உணரலாம்.
உயிரற்றது நிலம் ஆனால் அந்நிலம் இல்லையெனில் பூமியில் காணப்படும் எதுவும் இல்லை. அதுபோல படைக்கப்பட்ட உயிரினம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாடத்தை நமக்கு கற்றுத் தருகிறது.
நிலத்தின் தன்மைகள்:
இயற்கை பல்வேறு வண்ணங்களை சத்துக்களை கொண்ட மண் வகைகளைக் கொண்டது. அதுபோல ஒவ்வொரு ஆசிரியர்களும் பல்வேறு திறமைகளைக் கொண்டவர்கள். ஒரு ஆசிரியரிலிருந்து மற்றொரு ஆசிரியர் கண்டிப்பாக வேறுபட்டு தான் காணப்படுவார். மண்ணின் தன்மைக்கேற்ப பயிர்களை பயிர் இடுவது போல மாணவர்களின் குண நலன்களை கண்டறிந்து பயிற்சி அளிப்பவர்களே சிறந்த ஆசிரியர்கள்.
மண்ணின் வகைகள்
செம்மண்:
சிவப்பு நிறம். இரும்பு ஆக்சைடு அதிகம். வேகமாக நீரை உறிஞ்சும். நெல் கரும்பு கடலை போன்ற பயிர்களை பயிரிடலாம்.இந்த குணம் கொண்டவர்களை பார்வையிலே அறிந்து கொள்ள முடியும் நல்ல ஆசிரியர் என்று. அறிவாற்றல் மிக்கவர்கள். எதையும் வேகமாக புரிந்து கொள்பவர்கள். ஆனால் மாணவர்களுக்கு அதே வேகத்தில் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். உலகிலேயே அனைவரின் பசியையும் போக்கும் நெல் போல அனைவரது வாழ்க்கையிலும் இவர்கள் முக்கியமானவர்கள். இவர்கள்தான் நமது தந்தை என்னும் ஆசிரியர்.
கரிசல் மண்:
எரிமலைப் பாறை சிதைவுகளில் இருந்து உருவாகும் மண். ஈரத்தை தக்க வைத்து கொள்ளும். பருத்தி விளைவதற்கு ஏற்ற மண் கரிசல் மண். அதிக வலிகளை தாங்கி உருவான ஆசிரியர்கள் இவர்கள் .கற்றவற்றை தன்னகத்தே நீண்ட நாட்கள் வைத்திருப்பவர்கள். மெதுவாக பாடங்களை கற்றுத் தருபவர்கள். சில நேரங்களில் எரிமலையாய் இருந்தாலும் அதன் மூலம் நன்மை ஏற்படுமே தவிர பாதிப்பு ஒன்றும் நேராது. அனைவரின் உடலை மறைக்கும் ஆடையை போல மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் இந்த வகை ஆசிரியர்கள். இவர்கள் தான் நம்மை பெற்ற அன்னை.
வண்டல் மண்:
ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அனைத்து சத்துக்கள் நிறைந்த மண்ணை படிய வைத்துச் செல்லும் அந்த மண் தான் வண்டல் மண். அனைத்து விதமான அறிவையும் ஆற்றலையும் தன்னகத்தே கொண்டு அனைத்து பயிர்களையும் விளைவிக்கும் வண்டல் மண் போல அனைத்து விதமான பாடங்களையும் கற்றுத் தருபவர்கள் தான் ஆசிரியர் என்னும் ஆன்றோர் பெருமக்கள்.
சரளை மண்:
சத்துக் குறைவான மண் .ஈரப்பதம் உரம் ஆகியவற்றை குறைவாகவே வைத்துக் கொள்ளும். நம்முடன் அதிகம் நெருக்கம் இல்லாதவர்கள். ஆனாலும் அவர்களும் நம் வாழ்வில் உடன் வருபவர்கள் தேவைப்படும் போது மட்டும் அந்த நபர்களும் நம் வாழ்க்கையில் பலவிதமான பாடங்களை கற்றுத் தரும் ஆசிரியர்களாக மாறுவார்கள் .அவர்கள் இந்த சமுதாய உறுப்பினர்கள்.
உவர்மண்:
கடற்கரையில் காணப்படும். பயிர் விளைச்சலுக்கு ஏற்றதல்ல .கடலில் அலை வரும்போதெல்லாம் இழுத்துச் செல்லப்பட்டு மீண்டும் கரைக்கு வரும் மண் நம் வாழ்வில் வரும் இன்பமும் துன்பமும் உவர்மண் போன்ற ஆசிரியர்களாகும். இன்பம் வரும் போது மிகுந்த ஆட்டமும் துன்பம் வரும்போது மிகுந்த அழுகையும் ஏற்படுவது போல அவை விட்டு செல்லும் படிமங்கள் நிரந்தரமல்ல. மீண்டும் கடலுக்கு செல்லக்கூடியவை. நல்ல படிமங்களை அலை ஒதுக்கும்போது எடுத்துக் கொண்டால் நன்மையே என்ற பாடத்தை கற்றுக் கொள்ளலாம்.
முடிவுரை:
நிலத்தில் பல வகையான மண் இருந்தாலும் அத்தனையின் பயன்பாடும் நம் வாழ்வில் இருப்பது போல் ஒவ்வொரு வகையான குணநலன்களைக் கொண்ட ஆசிரியர்களும் வாழ்வில் அவசியம் என்பது இக்கட்டுரை வழி அறியலாம்.